உடல் உறுப்பு தானத்தில் பண மோசடி நடந்தது தொடர்பாக கேரளாவில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.கேரளாவில் சமீபகாலமாக சட்டவிரோதமாக உடல் உறுப்பு தானம் பெற உடந்தையாக செயல்பட்ட ஒரு கும்பலுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், உடல் உறுப்பு தானம் செய்வோர், பெறுவோர், மருத்துவமனை ஆகியவற்றுக்கு இடையே தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
கடந்த, 2023 ஆகஸ்ட் முதல் தீவிரமாக செயல்பட்ட இந்த கும்பல் கொச்சியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் லெட்டர்பேடுகள், போலீசாரின் அனுமதி சான்றுகள், எம்.எல்.ஏ.,க்கள் – எம்.பி.,க்களின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இவற்றை பயன்படுத்தி ஏழ்மையில் உள்ளோருக்கு குறைவான பணம் அளித்து சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக பெற்ற இந்த கும்பல், அதை உடல் உறுப்பு தேவைப்படுவோரிடம் அதிக விலைக்கு விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான காசர்கோடை சேர்ந்த நஜீப்பை கடந்த மாதம் போலீசார் உத்தர பிரதேசத்தில் கைது செய்தனர். உடல் உறுப்பு தானத்தில் நடந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஈ.டி.,எனப்படும் அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அவர்கள் நஜீப்புடன் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட மருத்துவமனைகளில் அதிரடியாக சோதனையிட்டனர். கொச்சி, திருவனந்தபுரம், கோட்டாயம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள், வீடுகள் என ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.கொச்சியில் மட்டும் மூன்று இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது உடல் உறுப்பு தானம் தொடர்பான மருத்துவ ஆவணங்கள், வங்கி பணப்பரிவர்த்தனை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

More Stories
செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்…
திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்; பெயின்டர் கைது…
நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓ: வெளுத்து வாங்கிய சகோதரர்…