தனது மனைவி சிகிச்சைக்கு முதல்வர் விஜய்யிடம் உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை…

நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர்முத்துக்காளை, கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில், எனது மனைவி மாலதிக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக, ஆப்ரேஷன் நடந்தது. இது முடிந்து 17 நாட்களுக்கு மேல் ஆகிறது. இந்த ஆப்ரேஷன் சரியாகும் முன்பே அதனால் ஏற்பட்ட விளைவுகள் காரணமாக நுரையீரல் தொற்று உள்ளிட்ட சின்ன சின்ன தொற்றுகள் காரணமாக, மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகிறார்.இந்த நேரத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் சார் அவர்கள் எனது மனைவிக்கு மேல் சிகிச்சை செய்ய அனுமதி அளித்து அவரின் உயிரை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். 17 நாட்களாக தனி ஆளாக போராடுகிறேன். இந்த நேரம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சார் உதவி செய்தால் நான் நன்றியோடு இருப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. முத்துக்காளையின் மனைவி மாலதி மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், கிருமி நோய் தொற்றால், ‘கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருக்கிறார். மனைவிக்கு மேல் சிகிச்சை பார்க்க போதிய பணம் இல்லாமல் வறுமையில் தவித்தார் முத்துக்காளை. இந்நிலையில் தனது மனைவிக்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யிடம் உதவி கரம் கேட்டு மனமுருகி அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் முதல்வர் விஜய்யின் பார்வைக்கு சென்றது. முதல்வர் விஜய் உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தொலைபேசியில் பேச வைத்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக அனுப்பி, நலம் விசாரித்து, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ராஜ் மோகன், முத்துக்காளை நேரில் சென்று , அவரின் மனைவி உடல்நலம் குறித்து விசாரித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு சிகிச்சைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன

நடிகர் முத்துக்காளை, விஜய்யுடன் ‘மின்சார கண்ணா’, ‘தமிழன்’, ‘யூத்’, ‘பகவதி’, ‘சுறா’ ‌போன்ற படங்களில் நடித்துள்ளார்.என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் இடம்பெற்ற ’வா செத்து செத்து விளையாடலாம்’ என்ற காமெடி மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். இவர் வடிவேலுடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி நடிகர் மட்டுமில்லை இவர் ஸ்டண்ட் கலைஞரும் கூட. பல படங்களில் சண்டை காட்சிகளில் நடிகர், நடிகைகளுக்கு டூப் போட்டுள்ளார். சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து கொண்டிருப்பவர். இவரின் மனைவி மாலதி. இருவரும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட ஒருமுறை கலந்து கொண்டனர். நடிப்பு மட்டும் இல்லாமல் படிப்பிலும் பல டிகிரி வாங்கியுள்ள முத்துக்காளை, கடைசியாக, ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான லக்கி தி சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.