September 19, 2026

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி உயிரிழப்பு…

குளித்தலை அருகே சாலை வளைவில் திரும்பியபோது, தனியார் பேருந்தில் இருந்த பெண் பயணி கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மாலதி (45). திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பியுள்ளார் மாலதி. குளித்தலை சுங்கவாயிலில் இருந்து மாயனூர் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளர்.

கரூர்- திருச்சி தேசிய புறவழிச் சாலையில் இணையும் இடத்தில் மேலக்குறப்பாளையம் வளைவில் பேருந்து அதி வேகமாக சென்று திரும்பியதில் பேருந்து முன் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த மாலதி பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை சக பயணிகள் மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாலதி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாலதியின் உடலை பிரேத பரிசோதனை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேருந்தை வேகமாக இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.