September 10, 2026

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்தால் தவெக அரசு கவிழும்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

சேலம்: தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் முதல்வர் விஜய் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திமுக-அதிமுக கூட்டு களவாணிகள் என முதல்வர் விஜய் கூறுகிறார்; ஆனால், இரட்டை இலை சின்னத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் தவெக தான் ஒரிஜினல் களவாணி” என்று அவர் சாடியுள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது உரையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

  • ‘ரீல்ஸ்’ காட்டிப் பெற்ற வெற்றி: தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே தற்செயலாக வெற்றி பெற்றுள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் படங்களைக் காட்டி, ‘ரீல்ஸ்’ மட்டுமே செய்து விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். தற்போதும் சினிமாவில் பேசுவது போலவே அவர் வசனம் பேசி வருகிறார். தமிழகத்தில் கஞ்சா, போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன.
  • சிங்கப்பெண் சிறப்பு படை ஒரு நாடகம்: தவெக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு படை’ திட்டம் உண்மையாக இல்லாமல் ரீல்ஸாகவே உள்ளது. இரவு நேரத்தில் இந்தச் சிறப்புப் படையைப் பாதுகாக்க இன்னொரு தனிப்படை அமைக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. இளைஞர்களையும் குழந்தைகளையும் மூளைச்சலவை செய்து வாக்கு சேகரித்து பெற்றுள்ள இந்த ஆட்சி, குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அலங்கோலமாகத் தவிக்கிறது.
  • சிபிஐ நடவடிக்கை எடுத்தால் ஆட்சி குளோஸ்: கரூர் சம்பவத்தில் 2 ஐ.ஜி-க்கள் தலைமையில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தவெக ஆட்சியை விளையாட விட்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த வழக்கில் சிபிஐ யாராவது ஒருவரைத் தூக்கினால் , தவெக ஆட்சி தானாக ஆட்டம் கண்டுவிடும். அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்றவர்கள் அங்கிருந்து மீண்டும் வந்தால் பூஜ்ஜியத்தில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அங்கு சென்ற அதிமுகவினரின் நிலைமை தற்போது மிகவும் கேவலமாக உள்ளது.
  • கூட்டணி தயவால் ஓடும் அரசு: தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தில் ஏராளமான பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய், தற்போது நிதி இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறார். தவெக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை; திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சி நடத்தி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் எப்போது காலை வாரினாலும் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்.

மேலும், ஜனநாயகன் படத் தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியும், அவரது ஆலோசகருக்குத் தமிழக அரசின் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “வரும் நாட்களில் முதல்வருக்கு மேக்கப் போடும் நபருக்கும் பதவி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

You may have missed