May 7, 2026

”ராஜினாமா செய்கிறேன்…” – திமுக தலைவர் ஸ்டாலினிடம் தமீமுன் அன்சாரி வருத்தம்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால், காங்கிரஸ், விசிக உட்பட கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சி கடிதம் அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தொடர்ந்து திமுகவுக்கே தங்களது ஆதரவு எனத் தெரிவித்துள்ளன.

தேர்தல் வெற்றிக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர். அப்போது வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், “தமிழ்நாட்டில், நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் பெரும்பான்மையைத் தராத நிலையில், கூட்டணி அரசு அமையும் என்ற சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு நாட்களாக எங்களிடத்தில் பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அனைவரிடமும் நாங்கள் உறுதியாக சொன்னது ஒன்றே ஒன்றுதான். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாரம்பரியமாக இருந்து வருகிறோம். அன்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம். இனியும் இருப்போம், என்றும் தொடர்வோம் என்று நாங்கள் அவர்கள் அனைவரிடமும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம். ஆகையால் இங்கே எங்களது நிலைப்பாட்டில் எந்த குழப்பமும் இல்லை. எங்களைப் பொருத்த வரை, ஜனநாயக அடிப்படையில் தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து நின்றோம். வெற்றியும் பெற்றோம். மக்கள் எந்த அடிப்படையில் எங்களுக்கு இந்த முடிவைத் தந்தார்களோ அந்த அடிப்படையிலேயே நாங்கள் தொடர்கிறோம். இவ்வாறாக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவாகவே இருக்கும். அதன் மூலம் நமது தமிழ்நாடு மாநிலத்தில் நல்லதே நடக்கட்டும்” எனத் தெரிவித்தார்.

இதேபோல், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, தன் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது; “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், அவர் தனது தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது வருத்தம். நீங்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி உட்பட தமிழ்நாட்டின் விருப்பம். தேவைப்பட்டால் நான் சிதம்பரம் தொகுதியில் ராஜினாமா செய்துவிடுகிறேன். நீங்கள் போட்டியிடுங்கள் என எங்களது விருப்பத்தைத் தெரிவித்தோம்.

அதற்கு தலைவர் ஸ்டாலின், என் கையை அழுத்தமாக பிடித்து ‘இந்த வார்த்தையை நீங்கள் சொல்லக்கூடாது. நீங்கள் சட்டமன்றம் சென்று சிறப்பாக செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார். எங்கள் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.