September 10, 2026

சென்னை: டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு; டிடிஆர்- பெண் வக்கீல் மாறிமாறி தாக்குதல்:

 எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பெண் வழக்கறிஞர் மற்றும் பெண் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் ஆகிய இருவர் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் மோகனா என்பவர், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் டிடிஆர் ஷல்மா பேகம், அவரிடம் பயணச்சீட்டு (டிக்கெட்) கேட்டுள்ளார். அதற்கு வழக்கறிஞர் மோகனா, தான் ரயிலில் ஏறுவதற்காக வந்ததாகக் கூறியுள்ளார். ‘‘சரி, அதற்கான டிக்கெட்டை காண்பியுங்கள்” என்று ஷல்மா பேகம் கேட்க, ‘‘இல்லை, ரயிலில் ஒருவரை வழியனுப்ப தான் வந்தேன்” என மாற்றிப் பேசியுள்ளார்.

இதையடுத்து,‘‘அப்படியானால் நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட்டையாவது காண்பியுங்கள்” என்று ஷல்மா பேகம் கேட்க, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகர்களின் அலுவலக அறைக்கு மோகனாவை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பெண் டிடிஆர் ஷல்மா பேகம் இந்த விசாரணையை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த வழக்கறிஞர் மோகனா, அவரது செல்போனை தட்டிவிட்டு, ஷல்மா பேகத்தை அடித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அங்கிருந்த மற்றொரு பெண் டிடிஆரும் மோகனாவை தாக்கினார். இதனால் மூன்று பெண்களும் சண்டையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிடிஆர் ஷல்மா பேகம் அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் மோகனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மோகனா அளித்த புகாரின் பேரில், தகாத வார்த்தைகளால் திட்டுதல், செல்போனைப் பறித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் டிடிஆர் ஷல்மா பேகம் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

You may have missed