திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஒப்புதல் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. தவெக ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள இந்து முன்னணி, திருப்பரங்குன்றம் பற்றிய ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கோடிக்கணக்கான முருக பக்தர்களும் இந்தத் தீர்ப்பை வரவேற்றனர். தீபம் ஏற்றப்படும் என நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால், திமுக அரசு நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுத்தது. இந்துக்களின் நம்பிக்கையை ஏற்க மறுத்தது. நீதிமன்றத்தை அவமதித்ததன் மூலம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது பற்றி தனிநபர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஜூன் 22ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஒட்டுமொத்த முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த திமுக ஆட்சி தொடர்ந்து இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராகவே செயல்பட்டது. கோயில்களின் மரபுகளை காக்க வேண்டிய அறநிலையத்துறையே தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பக்தர்களின் காணிக்கையை செலவழித்து மனுதாக்கல் செய்தது. ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளானதால் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது.

தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே இது அனைத்து மதத்தினருக்கும் சமமான அரசாக இருக்கும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். சென்ற ஆட்சியில் போலி மதசார்பின்மை என்ற பெயரில் திமுக செய்த தவறை தவெக அரசு செய்யாது என தமிழக மக்கள் நம்புகிறார்கள். சென்ற வாரம் கூட திருப்பரங்குன்றம் பற்றி ஆவணப்படத்தை திரையிடுகிறோம் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயன்றனர். இதை தமிழக அரசு தடை செய்ததை வரவேற்கிறோம். ஜனநாயக நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை மீது தமிழக அரசு நிச்சயம் தீபம் ஏற்றும் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.