200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.36,800 மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் அருகே போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதால், அந்த பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள கோவையில் போதை மருந்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, உயர் கல்விக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவைக்கு வந்து அறைகள் எடுத்து தங்கியுள்ள மாணவர்களின் விடுதிகள் மற்றும் அறைகளில் போலீசார் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டு போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர் பைசல் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அவர்களது இல்லத்தில் நடத்திய சோதனையில் வீட்டிலிருந்து 150 டபென்ட்டால் மாத்திரைகள், ஒரு கிராம் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து 36 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
200 ரூபாய் கள்ள நோட்டுகளை அவர்கள் பிரிண்டர் உதவியுடன் அச்சிட்டு புழக்கத்தில் விட இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுக்கு இந்த பிரிண்டரை காஜா மொய்தீன் என்பவர் வாங்கி கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
காஜா மொய்தீன் என்பவர் ஏற்கெனவே கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 64வது குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்தவர். பிரிண்டர் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மூன்று பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!