மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான திக்விஜயம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் ஆகிய வைபவங்கள் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெற உள்ளன. இதனையொட்டி, மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இன்று முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு முக்கிய போக்குவரத்து மாற்றங்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்:
- சரக்கு வாகனங்களுக்கான தடை: இன்று திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி வரை நான்கு ஆவணி மூல வீதிகளிலும் மினி வேன் உள்ளிட்ட எந்தவொரு சரக்கு வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.
- ஆவணி மூல வீதிகள்: இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி வரை நான்கு ஆவணி மூல வீதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாசி வீதிகள் மற்றும் தேரோட்டம்: மீனாட்சி அம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை தேரோட்டம் முடியும் வரை நான்கு மாசி வீதிகளிலும் இருசக்கர வாகனங்கள் உட்பட எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதி கிடையாது. புதன்கிழமை முழுவதும் கீழமாசி மற்றும் கீழமாரட் வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்துமிடங்கள் :
பக்தர்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அனுமதி சீட்டுகளின் நிற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:
- மஞ்சள் நிற அனுமதி சீட்டு: மேல ஆவணி மூல வீதி பகுதி.
- இளம் சிவப்பு (ரோஸ்) நிற அனுமதி சீட்டு: வடக்கு ஆவணி மூல வீதி பகுதி.
- நீல நிற அனுமதி சீட்டு: தெற்கு ஆவணி மூல வீதி பகுதி.
- கீழ ஆவணி மூல வீதி: இங்கு வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் ஓரமாக நிறுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி, இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது

More Stories
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் நாளை மதுரை புறப்படுகிறார் மீனாட்சி அம்மன் திருமணத்தில் பங்கேற்க!
பஞ்சகவ்யத்தை உட்கொண்டால் மட்டுமே சார் தம் யாத்திரைக்கு அனுமதி… பக்தர்கள் கண்டனம்
திருக்கல்யாண விருந்தில்… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…