September 10, 2026

கடலூர் அருகே வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கார் முற்றுகை:

வண்டல் மண் எடுக்க மாமூல் கேட்ட தவெக நிர்வாகி காரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலம் பகுதியில் நாரை ஏரி உள்ளது. தற்போது வறண்டு கிடக்கும் இந்த ஏரியிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், உரிய அனுமதி பெற்று வண்டல் மண்ணை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் புகழ்வேந்திரன், வண்டல் மண் எடுக்கும் பணிகளுக்காக விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. முறைப்படி அனுமதி பெற்றுவிட்ட நிலையில் கூடுதல் தொகை எதற்காக வழங்க வேண்டுமென விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புகழ்வேந்திரனின் காரை திடீரென வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

You may have missed