தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது.
பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து இன்று காலையில் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் பொதுமக்கள் பாக்யராஜின் உடலுக்கு மலர்களை தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர் இருந்தனர்.
பெசன்ட் நகர் மின் மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரின் இறுதி சடங்கில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜின் உடலுக்கு அவரது மகன் சாந்தனு இறுதி சடங்குகளை செய்தார். அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் நேற்று (ஜூன் 27) காலை நடைபயிற்சி மேற்கொண்ட பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பாக்யராஜ் உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் விஜய், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா வுக்கு ஆறுதல் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மநீம தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், சார்லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி, இயக்குநர்கள் மணிரத்னம், பார்த்திபன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, பாண்டியராஜன், சமுத்திரக்கனி, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன், சந்தானபாரதி, இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!