தேர்தல் ஆணையம் வார இறுதி நாட்களைத் தவிர்த்து, வேலை நாளான வியாழக்கிழமை தேர்தலை நடத்தியுள்ளது பாராட்டத்தக்கது, விடுமுறை கிடைத்தால் மக்கள் சுற்றுலா சென்றுவிடுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஆணையம் இப்படித் திட்டமிட்டிருக்கலாம் என்றும், வெளிநாட்டில் இருந்து வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். ..
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் எந்தவித சிரமமும் பார்க்காமல் மாலை 6 மணிக்குள் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார். இது நாட்டிற்கு மிகவும் நல்லது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடிவேலு பேட்டி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ‘அரசியலில் ரீ-டேக் எடுக்க முடியாது’ என்று சொல்லி உள்ளாரே? என்று கேட்டதற்கு, அத்தகைய கருத்துக்களைப் பற்றிப் பேச இது சரியான இடமல்ல என்று கூறித் தவிர்த்தார். இன்றைய இளைஞர்களின் அரசியல் புரிதல் மற்றும் அவர்கள் வாக்களிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு வடிவேலு, இளைஞர்கள் எல்லாருக்கும் ஓட்டு இருக்கா? 14 வயசா, 16 வயசா.. இன்னைக்கு எத்தனை பேருக்கு ஓட்டு இருக்கு.. ஆனால் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்காங்க.. எல்லாரும் கத்துறா.. என் பேரன்கூட கத்துறான்.. ஆனால், மெச்சூரிட்டியான இளைஞர்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நன்றாகத் தெரியும்..
ஊழல் குறித்த ஆங்கிலச் சுருக்கங்களைப் பற்றிச் செய்தியாளர் கேட்டபோது, “எனக்கு ஆங்கிலம் தெரியாது” என்று தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கூறிப் பேட்டியை நிறைவு செய்தார். ஒட்டுமொத்தமாக, மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதே வடிவேலுவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

More Stories
எனக்கு பதிலாக போடப்பட்ட ஓட்டை கேன்சல் செய்ய வேண்டும்… பெண் பரபரப்பு புகார்….
சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்! தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு…..
முன்னாள் காதலனின் மனைவி கொடூர கொலை….