ஒரு சிறிய கிராமத்திலிருந்து தொடங்கிய ஒரு இளம் பெண்ணின் கனவு இன்று பெரும் வெற்றிக் கதையாக மாறியுள்ளது. 23 வயதான நிஹாரிகா பார்கவா என்ற இளம் பெண், லண்டனில் உயர் படிப்புக்காக சென்றிருந்தபோது தன் பாட்டியின் சமையலறையில் நிறைந்திருந்த ஊறுகாய் வாசனையை மறக்க முடியாமல், அந்த வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். இன்று அவரது ‘தி லிட்டில் ஃபார்ம் கோ’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்திய ஊறுகாய் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று, வருடத்திற்கு ரூ.25 கோடி வருவாய் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.
லண்டனில் படிப்பு முடித்தபோது, அங்குள்ள சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைத்த ஊறுகாய்களைப் பார்த்து நிஹாரிகாவுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. அவை அனைத்தும் உணவு கெடாமல் இருக்க ரசாயனங்கள், வண்ணங்கள் சேர்க்கப்பட்டது. இவை “ஊறுகாய் போல் தோற்றமளித்தாலும், சுவை எதுவும் இல்லை” என்று சோகமடைந்தார். தன் பாட்டியின் வீட்டில் இருக்கும் மாங்காய் ஊறுகாய் வாசனையும் சுவையும் அவருக்கு மீண்டும் நினைவுக்கு வந்தது. அந்த ஏக்கமே அவரை இந்தியா திரும்பச் செய்தது. லண்டன் வேலையை விட்டுவிட்டு, மத்தியப் பிரதேசத்தின் பஹராபுர்வா கிராமத்தில் உள்ள தன் குடும்பத்தின் 400 ஏக்கர் பண்ணைக்கு வந்தார்.
ஊறுகாய் தயாரித்து விற்பதற்காகவே இந்தியா வந்த நிஹாரிகாவுக்கு நிலம், பாரம்பரிய ரெசிபி, பழங்கள், காய்கறிகள், பணியாளர்கள் என அனைத்தும் தயாராக இருந்தன. முதல் நாளே 200 ஜாடி ஊறுகாய்களைத் தயாரித்து உள்ளூர் சந்தைக்கு எடுத்துச் சென்றார் நிஹாரிகா, அன்று அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
அந்த வெற்றியே ‘தி லிட்டில் ஃபார்ம் கோ.’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்க அவருக்கு உத்வேகமாக அமைந்தது. இன்று இந்த நிறுவனம் தன் சொந்த நிலத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே பயன்படுத்தி ஊறுகாய் தயாரித்து வருகிறது. பழங்களும் காய்கறிகளும் பறிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் பதப்படுத்தப்படுகின்றன.
இந்த தொழிலில் பெரும்பாலான பணிகளை கிராமத்துப் பெண்கள் மேற்கொள்கின்றனர். வெளியே வேலைக்குச் செல்வது இன்னும் அரிதாகக் கருதப்படும் கிராமங்களில் இருந்து வரும் பெண்களுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. தி லிட்டில் ஃபார்ம் கோ. தயாரிக்கும் ஊறுகாய்கள் கெடாமல் இருக்க பாதுகாப்பு ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்டாலும் 12 மாதங்கள் வரை பாதுகாப்பாக இருக்கும். வர்த்தகத்தின் வளர்ச்சியின் மூலம் தற்போது ஒரேநேரத்தில் 300 கிலோ வரை தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது
இன்று நிஹாரிகாவின் ஸ்டார்ட்அப் 100x VC என்ற முதலீட்டு நிறுவனத்தால் நிதி உதவி பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது பாரம்பரியமான உணவுகள் மற்றும் ரெசிப்பிகள் அடிப்படையிலான வர்த்தகத்திற்கு சந்தையில் பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதேபோல் வழக்கமான பிராண்டு பொருட்களை மட்டுமே வாங்கும் மக்கள் தற்போது வளர்ந்து வரும் பிரண்டுகளுக்கும், புதிய பிராண்டுகளுக்கும் முன்னுரிமை அளிக்க துவங்கியுள்ளது. இதன் விளைவாக தி லிட்டில் ஃபார்ம் கோ வென்சர் கேப்பிட்டல் நிறுவனத்தில் இருந்து முதலீட்டையும் பெற்றுள்ளது.
தற்போது தி லிட்டில் ஃபார்ம் கோ தயாரிப்புகள் அமேசான், ஸ்விக்கி, பிளின்கிட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் பிரத்யேக கடைகளிலும் விற்கப்படுகின்றன. ஒரு 23 வயது இளம் பெண், தன் பாட்டியின் ரெசிபியை உயிர்ப்பித்து, மத்தியப் பிரதேசத்தின் சிறு கிராமத்தில் இருந்து தொடங்கிய இந்த தொழில் இன்று பெரும் வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

More Stories
சொத்து பிரச்சனைக்காக மனைவியை, நண்பர்களுடன் காரில் கடத்திய கணவர்…
வீடுகள் – விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்….
விபத்தில் சிக்கியவரின் உறவுப் பெண்ணை ஆம்புலன்சை கழுவ சொன்ன அவலம்: