April 28, 2026

கடைக்கு ஜேசிபியுடன் வந்த ரயில்வே அதிகாரிகள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரத்தில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகர் சேகர் என்பவர் கட்டியிருந்த கடை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக இரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தது தொடர்பாக முறைப்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டும், கடையை அகற்றாததால், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் ஜேசிபி மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரம் பகுதியில், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை திமுக பிரமுகர் சேகர் என்பவர் 15 ஆண்டு காலமாக ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பழச்சாறு கடை மற்றும் கடைகள் கட்டியுள்ளதாகவும், அதனை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்கள்.

ஆனால் இதுபற்றி உரிய நடவடிக்கை ரயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்பு நடந்த இடத்தில், பதாகைகளை வைத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆம்பூர் புதுகோவிந்தபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரத்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதுபற்றி ரயில்வே தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் திமுக பிரமுகர் சேகர் கடையை இடித்து அகற்றவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுகோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை, நேற்று முன்தினம் (ஏப்.25) ஆம்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். அதன் பின்னர், ஆக்கிரமிப்புகளை ஜோலார்பேட்டை ரயில்வே கோட்ட பொறியாளர் தலைமையிலான ரயில்வே துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினார்கள்.