April 27, 2026

“ரீல்ஸ் மோகம்”… பால் கேனால் இளைஞருக்கு நேர்ந்த கதி…

தற்போது பலரின் வாழ்க்கையில் சமூக வலைதளம், ரீல்ஸ் உள்ளிட்டவை ஒன்றாகிவிட்டது. எங்கே சென்றாலும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வாடிக்கையாக மாற்றி உள்ளனர்.

இந்நிலையில் தான் ராஜஸ்தானில் ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் செய்த சம்பவம் அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது. ஆம், பால் கேனை தலையில் கவிழ்த்து ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதியை இங்கு பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வார் மாவட்டம் மதோகார் கிராமத்தை சேர்ந்தவர் காலுராம். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கோதுமை வியாபாரம் செய்ய சென்றார். காலுராமின் நண்பர் டூவீலர் ஓட்டினார். காலுராம் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். கையில் அவர் பால்கேன் ஒன்றை வைத்திருந்தார். அப்போது கடுமையாக வெயில் இருந்தது.

இதனால் காலுராம் தனது கையில் இருந்த பால் கேனை தூக்கி தலையில் கவிழ்த்து வைத்தார். கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கும் வகையில் அவர் இந்த செயலை செய்தார். அதோடு அதனை ரீல்ஸாக செல்போனில் வீடியோ எடுத்தார். இந்த சமயத்தில் தலையில் கவிழ்த்து வைக்கப்பட்ட பால் கேன் மெதுமெதுவாக கீழே இறங்கி அவரது தலையில் ‘டைட்டாக’ சிக்கி கொண்டது

இதனால் பால்கேனை அவரால் தலையில் இருந்து எடுக்க முடியவில்லை. உடனடியாக குடும்பத்தினர் பலரும் பால்கேனை எடுக்க முயன்றனர். அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து வேறு வழியின்றி அவரை ஹார்ட்வேர் கடைக்கு அழைத்து சென்றனர். அங்கு காலுராமின் தலையில் சிக்கிய பால் கேன் வெட்டி எடுக்கப்பட்டது. தலையில் சிக்கியபடி பால் கேனுடன் காலுராம் டூவீலரில் வலம் வந்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது