April 26, 2026

கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடிய முதியவர்! 3 நாட்கள் இருட்டுக்குள் தவிப்பு:

  பாளையங்கோட்டைக்கு வந்துவிட்டு ஊர் திரும்பிய முதியவர் வழி தவறி கால்வாயில் விழுந்து மூன்று நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்ட சம்பவம் நெல்லையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மேலத்திடியூர் அருகே உள்ள பிரான்சேரி பிஎஸ்என் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (77). இவர் கடந்த புதன்கிழமை பாளையங்கோட்டைக்கு வந்துவிட்டு பஸ்சில் ஊர் திரும்பினார். பஸ்சை விட்டு இறங்கி நடந்து சென்றபோது அவர் திடீரென மாயமானார்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை அப்பகுதியில் சென்றவர்கள் வெள்ள நீர் கால்வாய்க்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டனர். உள்ளே எட்டிப் பார்த்தபோது, முதியவர் ராமசாமி காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பேட்டை தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மூன்று நாட்களாகத் தண்ணீரும் உணவும் இன்றித் தவித்த முதியவர் ராமசாமியை வீரர்கள் மிகவும் கவனமாக மீட்டனர். பின்னர் அவரை அவரது மகன் வெங்கடேஸ்வரனிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். தந்தை உயிருடன் கிடைத்ததைக் கண்டு மகன் கண்ணீர் மல்க வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.