சைக்கிளா? அல்லது TVS 50-ஆ? விஜய் என்ட்ரிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வாக்கை எப்போது, எப்படிச் செலுத்த வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடமும் அரசியல் நோக்கர்களிடமும் அதிகரித்துள்ளது.

விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த சொத்து பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் இருந்தாலும், ஆச்சரியமாக ஒரு TVS 50 XL ரக இருசக்கர வாகனத்தையும் பட்டியலிட்டுள்ளார். “சாதாரண மனிதனின் அடையாளமான TVS 50-ஐ விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதே, அவர் ஒரு ‘மாஸ்’ என்ட்ரி கொடுக்கப்போவதற்கான முன்னோட்டம்தான்” என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் கருப்பு சிவப்பு வண்ணமுள்ள சைக்கிளில் விஜய் வாக்களிக்க வந்தார். அப்படி வந்தபோது ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனாலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏதேனும் ஒரு “சிக்னல்” கொடுப்பதை விஜய் வழக்கமாகக் கொண்டவர்.

  • நீலங்கரையில் உள்ள அவர் வீட்டு வாசலிலும், வாக்குச்சாவடியிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • சைக்கிள்னா ஒரு மெசேஜ், ஆனா TVS 50-னா அது ஒரு எமோஷன்” என ரசிகர்கள் நீலங்கரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்ட அந்த பழைய TVS 50 வண்டியில் கெத்தாக வருவாரா அல்லது அமைதியாக காரில் வந்து கடமையை முடிப்பாரா? இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்துவிடும்!