சென்னை வடபழனி பகுதியில் 34 வயதாகும் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான ஆவடி அடுத்த வெள்ளனூர் ஞானராஜ் நகரில் உள்ள 5,469 சதுர அடி நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2025-ம் ஆண்டில் இடத்தின் பேரில் வில்லங்க சான்று போட்டுப் பார்த்துள்ளார். அப்போது அவரது இடம் வேறு ஒருவரது பெயரில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நவீன் அளித்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து நிலம் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் முக்கிய ஆசாமியான ஓசூர் அருகே மதகொண்ட பள்ளிப் பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (வயது 47) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவ்வழக்கில் சசிகுமார், மீரா மொய்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் எனக் கூறப்படுகிறது.
மோசடி கும்பல்கள் முதலில் உரிமையாளர் ஊரில் இல்லாத இடங்கள் அல்லது வயதானவர்கள் பெயரில் இருக்கும் இடங்களைக் கண்டறிகிறார்கள். குறிப்பாக, பல ஆண்டுகளாக வில்லங்கச் சான்று போடப்படாத அல்லது வேலி போடப்படாத இடங்கள் இவர்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறது அடுத்ததாக அசல் உரிமையாளரின் பெயரைப் பயன்படுத்தி போலி ஆதார் கார்டு மற்றும் பட்டாக்களைத் தயாரிக்கிறார்கள். ஆள் மாறாட்டம்: அசல் உரிமையாளரின் வயதில் இருக்கும் ஒரு நபரை (கூலிக்கு ஆள் பிடித்து) உரிமையாளர் போலவே ஆவணப் பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அசல் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, அந்த நிலத்தை அவரது வாரிசு போல ஒருவரை நடிக்க வைத்து, இன்னொருவர் பெயருக்கு ‘தான செட்டில்மென்ட்’ செய்வது போலப் பத்திரப் பதிவு செய்வார்கள். இதற்குக் கட்டணம் குறைவு என்பதால், எளிதாகப் பதிவு செய்துவிட்டு, பிறகு அந்தப் பத்திரத்தை வைத்து மூன்றாவது நபருக்கு விற்பனை செய்துவிடுவார்கள்.
உரிமையாளர் வெளிநாட்டில் இருந்தால், அவர் தனக்கு அதிகாரம் கொடுத்தது போல ஒரு போலி ‘பவர்’ பத்திரத்தைத் தயாரிப்பார்கள். அந்தப் பத்திரத்தை வைத்துக்கொண்டு, அந்த இடத்தை யாருக்காவது விற்றுப் பணத்தைச் சுருட்டிவிடுவார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆன்லைனில் உங்கள் நிலத்திற்கு வில்லங்கச் சான்று போட்டுப் பாருங்கள். யாராவது பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தால் உடனே தெரிந்துவிடும். உங்கள் பத்திரங்களுடன் உங்கள் ஆதார் எண்ணை இணைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் சொத்து தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் பதிவானால் உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வரும் வசதியைப் பதிவுத்துறை மூலம் செயல்படுத்திக் கொள்ளுங்கள். நிலத்தில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் போட்ட போர்டு வைப்பதும், சிறிய வேலி அமைப்பதும் 80% மோசடிகளைத் தவிர்க்க உதவும்.

More Stories
தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடல்! வாக்களிப்பதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை
ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்…..கார், ஆம்னி பஸ் மோதல்.. 3 பேர் பலி!
காதலரை தீவைத்து எரித்ததை தனது மொபைல் போனில் பதிவு செய்த காதலி!