April 22, 2026

காவலர் செய்யக்கூடாத வேலை.. தேடி வந்த சஸ்பெண்ட் ஆர்டர்!

அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது.. நடுநிலையுடன் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேர்தலை சிறப்பாக நடத்த பணியாற்ற வேண்டும்.. வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது.. அவர்களுக்கு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க உரிமை உள்ளது என்றாலும், ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என நிபந்தனைகள் உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் சபரி குமார் என்ற முதல் நிலை காவலர் காவலர்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளார். சபரி குமார் சட்ட நிபந்தனைகளையும் தேர்தல் ஆணைய விதிமுறைகளையும் மீறியதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் பணியில் இருந்த சில வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதிகாரிகள் இடமாற்றம் அதேபோல் ஒரு கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகக் கூறி சில மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது. ஏன் எதிர்க்கட்சிகளின் புகாரின் பேரில் தான், குறிப்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தந்த புகாரின் பேரில் தான் தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அதிகாரிகளை பலரையும் அதிரடியாக இடமாற்றியது.

எந்தவொரு அரசு ஊழியரும் (காவல்துறை உட்பட) எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடாது. பிரச்சாரம் செய்யக்கூடாது: அரசு ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவோ, வாக்கு சேகரிக்கவோ, நிதி திரட்டவோ கூடாது. அரசு வாகனங்கள், அலுவலகங்கள் அல்லது அரசு குடியிருப்புகளைப் பிரச்சார நோக்கத்திற்காகப் பயன்படுத்த அனுமதிப்பது சட்டப்படி குற்றம். தேர்தல் பணியில் இருக்கும்போது அனைத்துக் கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும். ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்படுவது பணிநீக்கம் வரை கொண்டு சென்றுவிடும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கூட அரசியல் சார்புடைய பதிவுகளைப் பகிரவோ, ‘லைக்’ செய்யவோ அரசு ஊழியர்களுக்குத் தடை உள்ளது.எந்த கட்சி பிடித்தாலும் லைக் செய்யவோ , பிரச்சாரம் செய்யவோ, அவர்களுக்கு ஆதரவாக பதிவு போடவோ முடியாது, சஸ்பெண்ட் செய்யப்பட்டால் என்ன ஆகும்? சபரி குமார் போன்ற காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அவரது பதவி உயர்வு தான். அத்துடன் ஊதிய உயர்வு நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது. கடுமையான குற்றச்சாட்டாக இருக்கும் பட்சத்தில் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் “தராசு” போல நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறையாகும் .