சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதாகும் விவேக் சுதன் என்பவருடைய இவருடைய மனைவி பிரியதர்ஷினிக்கு 27 வயது ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர். பிரியதர்ஷினி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட நேரமாகியும் பிரியதர்ஷினி சுயநினைவு இழந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் டாக்டர்களிடம் கூறினார்கள். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் உடல்நிலை மோசடைந்த காரணத்தால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கடந்த 12-ந் தேதி பிரியதர்ஷினி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரது உறவினர்களை கோபத்தில் ஆழ்த்தியது. எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் பிரியதர்ஷினி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். அத்துடன், கவனக்குறைவாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பிரியதர்ஷினியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பிரியதர்ஷினியின் கணவர் விவேக் சுதனிடம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் சாந்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, உடலைப் பெற்றுக்கொள்ள விவேக் சுதன் சம்மதித்தார். இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்திலும் விவேக் சுதன் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பிரியதர்ஷினியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

More Stories
3 பிளைட்.. 48 மணி நேரம் டிராவல்! ஜெர்மனி டூ சென்னை! ஓட்டு போட ஓடி வந்த பாட்டி!
வீட்டிலிருந்தே பிஎச்.டி (Ph.D)…. இனி காலேஜுக்கு போகத் தேவையில்லை…
தொழிலாளியை கொன்ற மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை…