April 21, 2026

வீட்டிலிருந்தே பிஎச்.டி (Ph.D)…. இனி காலேஜுக்கு போகத் தேவையில்லை… 

தொலைதூரக் கல்வி துறையில் முன்னணி பங்காற்றி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 ஜூன் பருவத்திற்கான பிஎச்.டி சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொலைதூர முறையிலும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுவது, வேலை செய்து கொண்டே கல்வியைத் தொடர விரும்புவோருக்கு பெரும் ஆதரவாக உள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள தகவலின்படி, முழுநேர மற்றும் பகுதி நேர முறைகளில் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் சேர்க்கை முறையின் கீழ், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிஎச்.டி படிப்பில் சேர விரும்புவோர், தங்களது முதுகலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கீட்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விதிமுறைகளின்படி மதிப்பெண் தளர்வு வழங்கப்படும். மேலும், நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செயல்முறை நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருக்காது. துறைகளில் உள்ள ஆராய்ச்சி வழிகாட்டிகளின் காலிப்பணியிடங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் இருக்கைகள் நிர்ணயிக்கப்படும். இதனால் போட்டித்தன்மையும் அதிகமாக இருக்கும் என்பதால் விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியமாகிறது.

இந்த முனைவர் பட்டத்தை நிறைவு செய்பவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள். இதனுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு கல்வி நிலைகளில் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளில் B.A, B.Com, B.Sc, BBA, BCA போன்றவை, முதுகலை படிப்புகளில் M.A, M.Com, M.Sc, MBA, MCA போன்றவை இடம்பெறுகின்றன. , டிப்ளமா படிப்புகளாக ஜர்னலிசம், யோகா, கணினி பயன்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளாக மொழிப் பயிற்சி, அடிப்படை கணினி, ஆரோக்கியம் சார்ந்த பாடங்களும் வழங்கப்படுகின்றன.

பிஎச்.டி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான விண்ணப்ப முறை, தகுதிகள், கட்டண விவரங்கள் மற்றும் இறுதி தேதி போன்ற முழுமையான தகவல்களை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnou.ac.in மூலம் அறிந்துகொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் காலவரம்புக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.