September 10, 2026

விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புவோம், . அரியலூரில் திருமாவளவன் பரப்புரை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் தான், இன்று அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலுவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், “நண்பர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு விசில் சின்னம் அறிவிக்கப்பட்டிருக்கிறது; விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புவோம், லதா பாலுவை சட்டமன்றத்திற்கு அனுப்புவோம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் பேராதரவாலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, இரட்டை இலைக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு மற்றும் பாஜகவுக்குப் போடும் ஓட்டு என்று எச்சரித்ததுடன் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை பாஜகவோடு எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி தற்போது பாஜகவைத் தோளில் சுமந்து செல்கிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

You may have missed