மதுரை |
திருமங்கலம் திரளி கண்மாய் மண் கொள்ளை விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தின் லாரியைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு – முடங்கிய அதிகாரிகள்:
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் உதயசிங் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை ,பொதுபணித்துறை, திருமங்கலம் தாசில்தார் ஆகியோர்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தகட்ட சட்டப் போராட்டத்திற்காக வழக்கறிஞர் மூலம் தனியார் நோட்டீஸ்களும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்பட்டு, சட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
போலீஸ் வேட்டையில் சிக்கிய அதிமுக வேட்பாளர் லாரி:
இந்தச் சூழலில், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் லோகிராஜனுக்குச் சொந்தமான ALR கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன லாரி, திருமங்கலம் திரளி கண்மாயில் மண் அள்ளிச் சென்று, விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாகக் கடத்தியபோது போலீசாரிடம் கைகோடு சிக்கியது. மதுரை மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் இந்த விதிமீறல்களைக் கண்டும் காணாமல் இருந்த நிலையில், நத்தம்பட்டி போலீசார் தங்களது ரோந்து பணியின் போது அதிமுக வேட்பாளரின் லாரியைப்பறிமுதல் செய்து, ஓட்டுநர் மலைச்சாமியைக் கைது செய்துள்ளனர்.
அம்பலமான கள்ளச்சந்தை விற்பனை:
நீதிமன்றத்தில் இன்னும் தனது வாதத்தைத் தொடங்காத ALR நிறுவனம், அதற்குள்ளாகவே ஒரு குற்றவியல் வழக்கில் சிக்கியுள்ளது அந்த நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் சாலைப் பணிக்காக அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்கிறோம்” என்று ஒப்பந்ததாரர் தரப்பு கூறி வரும் நிலையில், பிடிபட்ட லாரி மண்ணை அரசுப் பணிக்குப் பயன்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனுதாரர் அதிரடி:
இது குறித்து மனுதாரர் உதயசிங் கூறுகையில், “உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே துணிச்சலாக மண் கடத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மதுரை மாவட்ட கலெக்டர், கனிமவளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் சூழலில், நத்தம்பட்டி போலீசார் லாரியைப் பிடித்திருப்பது எனது புகாரில் உள்ள உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த FIR நகலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் ஆதாரமாகச் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்யக் கோருவேன்” எனத் தெரிவித்தார்.






