சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் வெடி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை மறைக்க முயற்சி நடப்பதாகக் கூறி, அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விபத்து நடந்த மாவட்டத்தையே மாற்றி வழக்கு பதிவு செய்திருப்பதாகச் சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் எழுப்பியுள்ளார்.

​விபத்து நடந்தது எப்படி?

சிங்கம்புணரி பகுதியில் வானவெடி தயாரிக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாகச் சரவெடி தயாரித்து வந்த ஆலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தீபக்குமார் மற்றும் சாந்தன்குமார் ஆகிய வடமாநில இளைஞர்கள் பலத்த தீக்காயமடைந்தனர். இதில் தீபக்குமார் சிகிச்சை பலனின்றி மார்ச் 5-ம் தேதி உயிரிழந்தார்.

மறைக்கப்படும் உண்மைகள் –

போஸ்டர் போராட்டம்:

இந்த விபத்து சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் நடந்த நிலையில், ஆலை நிர்வாகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. “கோவில் திருவிழாவிற்கு வெடி கொண்டு சென்றபோது விபத்து நடந்ததாக” ஜோடிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்த உண்மைகளை மக்கள் அறியும் வகையில், “எல்லைகளை மாற்றி உண்மையை மறைப்பதா?” என்ற தொனியில் சமூக ஆர்வலர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் இப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

உரிமையாளர் தரப்பு விளக்கம்:

இது குறித்து வெடி ஆலை உரிமையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அப்படி ஒரு சம்பவமே எங்கள் ஆலையில் நடக்கவில்லை. எதுவாக இருந்தாலும் எங்கள் வழக்கறிஞர் பேசுவார்” எனத் தெரிவித்துவிட்டார்.

​சட்டப்பூர்வ கேள்விகள்

உரிமையாளர் “சம்பவமே நடக்கவில்லை” எனக் கூறும் நிலையில், உயிரிழந்த இளைஞர் யார்? கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கிற்கும் இந்த ஆலைக்கும் தொடர்பு என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. மாவட்ட எல்லையை மாற்றி வழக்கு பதிவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.

சம்பவம் குறித்துச் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய விசாரணை நடத்தி, சட்டவிரோத வெடி ஆலை மீதும், எல்லை மாற்றி வழக்கு பதிவு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.