சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தைக் கருதி அதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்தறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார், ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி. கடந்த 5ம் தேதி இரவு இந்த இருவரையும், அரிவாளால் வெட்டி விட்டு 2 பேர் தப்பி ஓடிய வழக்கில் மானாமதுரை போலீசார், கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகியோரை விரட்டிப்பிடித்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ஆகாஷ் டெலிசன் தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இளைஞர் உயிரிழப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.
உறவினர்கள் தொடர் சாலை மறியல்
மதுரை அரசு மருத்துவமனையில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பத்தினர், உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி சென்றனர். உறவினர்கள் 2வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
இந்நிலையில் மானாமதுரையில் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியதை அடுத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.






