மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, இதை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆதரவாக திமுக

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநகராட்சி நிர்வாகப் பதவிகளில் இருந்த ஆளும் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விடியா திமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

ராஜினாமா பிறகு..?

மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகியும், அப்பதவிகளுக்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குற்றம் இழைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

‘முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில்’, கழக அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ, தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா, முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.