அரசுப்பணி என்கிற கனவோடு டிஎன்பிஎஸ்சி குரூப்-2/2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் தனது கடும் கண்டனங்களை தெரிவிதுள்ளார்.

விஜய் கண்டனம்
இதுகுறித்து விஜய் பதிவிட்டுள்ளதாவது, “ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும், மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்” என்றார்.
திமுகவுக்கு எதிராக கேள்வி?
மேலும், “எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று TNPSC குரூப்- 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும்,
இது அரசின் கடமை
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி..!” என்று தவெக தலைவர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






