2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று 2ஆம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.

​ஏற்கனவே ஜனவரி மாதத்தில் முதற்கட்ட வாக்குறுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நடுத்தர மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்டு அடுத்த 5 முக்கிய அறிவிப்புகள் அதிமுக தரப்பில் வெளியாகியுள்ளன.

​அதிமுகவின் 2ஆம் கட்ட வாக்குறுதிகள் :-

​1. சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் உயர்வு :-

​முதியோர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் தற்போதுள்ள தொகையிலிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்.

​2. 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் :-

​அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration Card holders) ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

​3. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து

​மாணவர்களின் நலன் மற்றும் பெற்றோரின் பாரத்தைக் குறைக்கும் வகையில், வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு, அந்தத் தொகையை அரசே ஏற்கும்.

​4. ஜல்லிக்கட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு & நிதியுதவி

​ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
​காயமடைபவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை சிகிச்சை மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும்.
​அரசு அங்கீகாரம் பெற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த ரூ. 5 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும்.

​5. சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்
​இஸ்லாமிய, கிறித்தவ உள்ளிட்ட சிறுபான்மையினப் பெண்கள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.​

மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும், என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

​முதற்கட்ட வாக்குறுதிகள்:-

குலவிளக்குத் திட்டம்: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,000 உரிமைத்தொகை.
இலவச பேருந்து பயணம்: பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: 5 லட்சம் பெண்களுக்கு ரூ. 25,000 மானியத்துடன் ஸ்கூட்டர்.
100 நாள் வேலைத் திட்டம்: பணி நாட்கள் 150 நாட்களாக உயர்வு.
அம்மா இல்லம் திட்டம்: வீடற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

அதிமுகவின் இந்த அறிவிப்புகள் குறித்த விரிவான முழு தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.