மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முன்னிலையில் உள்ளார். முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு விலை உயர்ந்த கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விமரிசையாக தொடங்கியது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1,100-க்கும் மேற்பட்ட காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த போட்டியில் அதிக காளைகளைப் பிடித்து வெற்றி பெறும் சிறந்த வீரருக்கு விலையுர்ந்த ஹூண்டாய் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோவில்களில் காளைகள் வாடிவாசலில் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன. கோவில் காளையை வீரர்கள் யாரும் பிடிப்பதில்லை.

இந்தாண்டும் அபிசித்தர் முன்னிலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 3வது சுற்று முடிவடைந்தது. 251 காளைகள் களம் கண்டது. 39 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 9 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளையும், சொட்டதட்டி சுந்தர் 6 காளைகளையும், மதுரை கருவனூரை சேர்ந்த அகத்தியன் 3 காளைகளையும் பிடித்துள்ளனர்.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்

மதுரையில் நடைபெற்று முடிந்த அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை விட அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டை காண கூடுதலாக ஆயிரக்கணக்கான மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை புரிவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.