மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்ட 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது.

நிலம் குத்தகை ஒப்பந்தம்

1968ஆம் ஆண்டு தமிழக அரசு, மதுரை நகரின் முக்கிய பகுதியில் உள்ள சுமார் 5.9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, பாண்டியன் ஓட்டல் நிறுவனம் ஓட்டல் நடத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு குத்தகையாக வழங்கியது.

ஆனால் குத்தகை காலம் முடிந்த பிறகும் மதுரை ஓட்டல் பாண்டி நிர்வாகம் எடுத்துக் காலி செய்யாமல் அதே நிலத்தில் ஹோட்டல் நடத்தி வந்தது அதற்குரிய கட்டணம் முறையாக செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றமும் சென்றது.

அரசு நிலம் ரூ.300 கோடி

இந்த வழக்கு பல வருட காலம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. விசாரணையின்போது, நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த பிறகும் அரசு நிலத்தை கட்டணமின்றி பயன்படுத்தி வந்தது தவறு என்று குறிப்பிட்டது. மேலும், அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அதன்படி, 2015ல் அரசு, அந்த 5.9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ரூ.36.58 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை என சொன்ன பாண்டியன் ஓட்டல் நிர்வாகம், அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

5.9 ஏக்கர் நிலம் மீட்பு

இறுதியில், மதுரை பாண்டியன் ஹோட்டல் இருந்த 5.9 ஏக்கர் இடத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

நிலத்தை மீட்ட அடுத்த நாளே, ‘ஓட்டல் தமிழ்நாடு’ அலுவலகத்தை அங்கே நிறுவி புக்கிங் செயல்முறைகளை தொடங்கியது தமிழக அரசு.

ஓட்டல் பார்சூன் பாண்டியன்

பல ஆண்டுகளாக நீடித்து வந்த பாண்டியன் ஓட்டல் அரசு நில வழக்கு முடிவுக்கு வந்து, அரசு சொத்து மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

ஏற்கனவே இக்கழகத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 1, அழகர்கோவில் ரோட்டில் யூனிட் 2 ஓட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது யூனிட்டாக ஓட்டல் பார்சூன் பாண்டியன் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.