2026ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா வழக்கம் போல மிகுந்த உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்று முடிந்தது.
இந்த ஆண்டில் முதல் இடத்தை 2 மாடுபிடி வீரர்கள் பிடித்துள்ளதும், அவர்கள் இருவரும் தான் அதிக காளைகளை அடங்கியதாக பேட்டி அளித்துள்ளதும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

விழா தொடக்கம் :-
மதுரை பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றுக்கு மாடுபிடி வீரர்கள் மரியாதை செலுத்தி வழிவிட்டனர். அந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்க மாட்டார்கள்.

பங்கேற்பு:
சுமார் 800-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு களமிறங்கினர்.

பாதுகாப்பு:
மருத்துவக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழா நடைபெற்றது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் கடுமையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

பரிசுகள்:
சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் கார், பைக், தங்க நாணயங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எனப் பரிசுகள் மழையாகக் குவிந்தன.
முதலிடம் பிடித்த 2 வீரர்கள்
போட்டியின் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் ஆகிய இருவர் 16 களைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். இதையடுத்து குலுக்கல் முறையில் முதல் பரிசு பெறும் வீரரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாடுபிடி வீரர் அஜித்துக்கு முதல் பரிசான கார் வழங்கப்பட்டது. மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு 2-வது பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி, தங்க நாணயங்கள், டி.வி., சைக்கிள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாடுபிடி வீரர்களின் கோரிக்கை
முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுபிடி வீரர்களும், “தங்கள் குடும்பம் கஷ்டத்தில் உள்ளது என்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு சார்பில் அரசு வேலை வழங்க வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






