ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்ட சோலார் பேருந்து நிலையத்தில், ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
சுமார் 74.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஈரோடு சோலார் பேருந்து நிலையம், எதிர்பார்த்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வராத நிலையில், நாய்களின் தொல்லை பயணிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் நடைமேடைகள், பேருந்துகள் நிற்கும் இடங்கள் என எல்லா இடங்களிலும் நாய்கள் சுற்றித் திரிவதால், பயணிகள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்.
சோலார் பேருந்து நிலையம்
மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தெற்கு மாவட்டங்கள் மற்றும் வெள்ளக்கோவிலுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கடந்த கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டிசம்பர் 4 அன்று பேருந்து சேவைகள் தொடங்கின. ஆனால், தனியார் பேருந்து நிறுவனங்கள், மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்தே தங்கள் சேவைகளைத் தொடர்ந்தன.
தற்போது, சோலார் பேருந்து நிலையம் TNSTC பேருந்துகளுக்கு ஒரு நிறுத்தமாக (வெளியூர் பேருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.

பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்
இந்த பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள், இங்குள்ள நாய்களின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், சிலர் பேருந்து நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாய்களுக்கு உணவு கொடுப்பதால், அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள், நாய்கள் தொடர்ந்து இங்கேயே இருப்பதால் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
பயணிகள் அச்சமின்றி பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் சூழலை உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், பேருந்து நிலையம் மேலும் பயனற்றதாகிவிடும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






