கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகாமிட்டு, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், தவெக மாநில பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோருக்கு, விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகுமாறு டெல்லி சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதே போல கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கே.ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த்ன், டிஎஸ்பி வி.செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.





