September 10, 2026

வளைவை கடக்கும் போது திடீரென தடம் புரண்ட ரயில்… 13 பயணிகள் பலி

மெக்சிகோவில் ஒரு வளைவைக் கடக்கும் போது ரயில் தடம் புரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகா மற்றும் வெராக்ரூஸ் மாநிலங்களை இணைக்கும் வகையில் இன்டர்ஓசியானிக் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 9 பணியாளர்கள் மற்றும் 241 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், நிசாண்டா நகருக்கு அருகே ஒரு வளைவைக் கடக்கும்போது தண்டவாளத்தை விட்டு ரயில் தடம் புரண்டது.

இதையறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து ரயில் பெட்டியின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டினர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 36 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓக்சாகா ஆளுநர் சாலமன் ஜாரா குரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாநில அதிகாரிகள் கூட்டாட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

You may have missed