அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சென்னையில் உள்ள ஓட்டலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசிய விவகாரம் தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.
தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி , நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து சந்தேகிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ராகுலுக்கு நெருக்கமான தலைவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்தது. இந்த குழுவும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பியை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அண்மையில் சென்னை வந்த கே.சி.வேணுகோபால், தனது வருகை ரகசியமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கட்சியினர் வருகையில் இருந்து தப்பிப்பதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். ஆனால், அவரது வருகையை மத்திய உளவுத்துறை திட்டமிட்டு கசிய விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கே.சி.வேணுகோபால், தவெக தலைவர் விஜய் சந்திப்பு தற்காலிகமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவர்கள் இருவரும் தொலைபேசியில் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கே.சி.வேணுகோபாலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசியுள்ளார். அவருடன் சில தவெக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த ரகசிய சந்திப்பு தற்போது வெளியாகியுள்ளதால் திமுக டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரவீன் சக்கரவர்த்தி பிரச்னை குறித்து ராகுல் காந்தியின் கவனத்திற்குக் கொண்டு சென்ற திமுக, இந்த முறை, காங்கிரஸ் தலைமையைச் சேர்ந்த ஒருவரே தவெகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை உணர்ந்து அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.






