சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அதிமுகவுடன் கூடடணி அமைத்துள்ள பாஜக, கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அத்துடன் கூட்டணிக்குள் இன்னும் சில கட்சிகளை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை பாஜக தலைமை அமைத்துள்ளது. இந்த நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ்கோயல் சென்னைக்கு இன்று (டிச.23) சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற பியூஸ்கோயலுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கூட்ட அரங்கில் உயர்மட்ட குழுவினருடன் பியூஸ்கோயல் கலந்து பேசினார். இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் ஒரு மணி நேரமாக நடைபெற்றது.

இதையடுத்து சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை பியூஸ்கோயல் சந்தித்தார்.  அங்கு வந்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். தொகுதி நிலவரம், எத்தனை தொகுதிகள் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை பியூல்கோயல் சந்தித்து பேசுகிறார்.