சென்னையைச் சேர்ந்த ஒருவர் 2025-ம் ஆண்டில் ஸ்விக்கி மூலம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து ஆணுறை வாங்கிய தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கடந்த 2014 ஆகஸ்ட் முதல் செயல்பட்டு வரும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனம், 2020 ஆகஸ்ட் மாதம் முதல் இன்ஸ்டா மார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வீட்டு சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்தால் 10 முதல் 20 நிமிடங்களுக்குள் டோர் டெலிவரி பெறலாம்.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டு இந்தியர்கள் ஆன்லைனில் எப்படி பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025-ம் ஆண்டு அதிகபட்சமாக 22 லட்சம் ரூபாய்க்கு பொருட்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஒருவர் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் பிரிண்ட் அவுட் எடுப்பதற்காக 10 ரூபாய் செலவிட்டதே 2025-ல் மிகவும் குறைந்த விலையிலான ஒரு ஆர்டராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்று ஐபோன்களை 4.3 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருப்பது ஒரே நேரத்தில் பெறப்பட்ட அதிக விலை மதிப்புள்ள ஒரு ஆர்டராக இருந்ததாகவும், மும்பையைச் சேர்ந்த ஒருவர் 15.16 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருப்பதாகவும் இன்ஸ்டாமார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒருவர் 2025-ம் ஆண்டில் ஆணுறை வாங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவிட்டிருப்பதாகவும், அந்த நபர் 228 முறை ஆணுறை ஆர்டர் செய்ததாகவும் அதன் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 6,398 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணுறை விற்பனை ஆன்லைனில் படுஜோராக நடப்பதாகவும், ஒவ்வொரு 127 ஆர்டருக்கு ஒரு தடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






