April 15, 2026

மதுரை,கோவை மெட்ரோ திட்டத்தை நிராகரித்த பாஜக அரசு…மு.க.ஸ்டாலின் கண்டனம்

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளப்பதிவில் ,” ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் ‘NO METRO’ என நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை. கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார் .