ராஜபாளையம் அருகே கோயிலில் காவலாளிகள் இருவரை கொலை செய்த கொலையாளியை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயிலில் நள்ளிரவில் புகுந்த ஒரு கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. அப்போது அதை தடுத்த கோயில் காவலாளிகள் பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியனை அந்த கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. அத்துடன் கண்காணிப்பு கேமராகள், உண்டியல்கள், வெள்ளிப் பொருட்களை அந்த கும்பல் சூறையாடியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், விருதுநகர்மாவட்ட சூப்பிரண்டு கண்ணன், துணை சூப்பிரண்டு பசினா பீவி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த இரட்டைக் கொலையில் அதே ஊரைச் சேர்ந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். கொலையாளி என சந்தேகப்படும் நாகராஜை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதனால் அவரை போலீஸார், காலில் சுட்டுப் பிடித்தனர். மேலும் முனியசாமி என்பவர் தப்பிய நிலையில் அவரை பிடிக்க போலீஸார தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


