கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், 41 பேர் பலியானதை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று எம்.எல்.ரவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, ஒரு வழக்கு விசாரணை நடைபெற்று, அதில் திருப்தி இல்லாவிட்டால் விசாரணையை சிபிஐக்கு மாற்றும்படி கோரலாம். ஆனால், ஆரம்ப நிலையிலே விசாரணையை சிபிஐக்கு மாற்றுமாறு எவ்வாறு கோ முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் பாதிக்கப்பட்டவரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிதற்கு, இல்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரிய ரவியின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் சிபிஐ விசாரணை கோரியவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள். யாராவது இப்படி நடக்கும் என நினைத்து பார்த்திருப்பார்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


