விஜய் கட்சிக்கு கோடிகளை வாரி வழங்கிய அமைச்சர்கள் – தேர்தல் ஆணைய ஆவணத்தில் வெளியான முக்கிய தகவல்கள்!
சென்னை, அக்டோபர் 18:
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடந்த 2025–2026 நிதியாண்டில் ரூ.13.30 கோடி நன்கொடை கிடைத்துள்ள நிலையில், அதில் பெரும்பகுதியை அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளே வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள படிவம் 24A (Form 24A) மூலம் கட்சிக்கு கிடைத்த நன்கொடைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதிக நன்கொடை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
வெளியாகியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.8.20 கோடியை தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2025 ஜனவரி 31ஆம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதையடுத்து, கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது தமிழக அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா, கட்சிக்கு ரூ.8.20 கோடி நன்கொடை வழங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரூ.5 கோடி வழங்கிய மற்றொரு அமைச்சர்!
ஆதவ் அர்ஜுனாவுக்கு அடுத்தபடியாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கியிருப்பவர் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட ரஞ்சித்குமார், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளரை 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் ரஞ்சித்குமார், தேர்தலுக்கு முன்பாகவே கட்சியின் வளர்ச்சிக்காக ரூ.5 கோடி நிதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி நிறுவனங்களும் நன்கொடை!
இதற்கிடையே, தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் முகவரியைக் கொண்ட இரண்டு நிறுவனங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் சரக்குப் போக்குவரத்து தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த நிதியை வரைவோலை (Demand Draft) மூலம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்த நன்கொடையில் பெரும்பங்கு இருவரிடமிருந்து!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2025–2026 நிதியாண்டில் கிடைத்த மொத்த நன்கொடையான ரூ.13.30 கோடியில், ஆதவ் அர்ஜுனா வழங்கிய ரூ.8.20 கோடியும், ரஞ்சித்குமார் வழங்கிய ரூ.5 கோடியும் சேர்த்து ரூ.13.20 கோடி ஆகும்.
இதன்படி, கட்சிக்கு கிடைத்த மொத்த நன்கொடையில் சுமார் 99 சதவீதம் இந்த இரண்டு முக்கிய நிர்வாகிகளிடமிருந்தே பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் கட்சிகளுக்கான நன்கொடைகள் குறித்த விவரங்கள் கவனம் பெற்று வரும் நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

More Stories
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!
தவெகவுக்கு முழு ஆதரவு! பிராமணர் சங்கம் அதிரடி அறிவிப்பு – தமிழக அரசியலில் பரபரப்பு!
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்த புதிய கட்டுப்பாடு! நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றம்!