October 27, 2026

கவர்மெண்ட் ஆபீஸ்னாலே லஞ்சம் தானே…” – அரசு அலுவலகப் பெண் ஊழியரின் ஆடியோ வைரல்!

அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தி வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சார்பதிவு அலுவலகத்தில் அரசு கட்டணத்தை விட கூடுதலாக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் ஆடியோவின் பின்னணி:

தேவகோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யச் சென்றுள்ளார். அப்போது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பத்திரம் எழுதும் நபரிடம் பணியாற்றும் பெண் ஊழியரிடம் வாடிக்கையாளர் கேள்வி எழுப்பிய உரையாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த உரையாடலின் விவரம்:

  • வாடிக்கையாளர்: “வணக்கம் மேடம், நான் பத்திரத்தை வாங்கிவிட்டேன். அதில் ரூ.500க்கான முத்திரைதான் உள்ளது. நான் 28 ஆயிரம் கொடுத்தேனே?”
  • பெண் ஊழியர்: “ரூ.500க்கான ஸ்டாம்ப் பேப்பர் இணைத்துள்ளோம். ரூ.19,500 அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும். எங்களுக்கு பத்திர எழுத்து கூலி 2 ஆயிரம், பத்திர அலுவலகத்திற்கு ரூ.5,000 கொடுக்க வேண்டும்.”
  • வாடிக்கையாளர்: “பத்திர எழுத்து கூலி உங்களுக்கு கொடுக்க வேண்டும், அது நியாயம் தான். ஆனால் ஏன் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாங்கள் கொடுக்க வேண்டும்?”
  • பெண் ஊழியர்: “ஆபீஸ்ல சும்மா பத்திரம் பதிய முடியாது. கவர்மெண்ட் ஆபீஸ்னாலே லஞ்சம் கொடுத்துதான் பண்ணணும். எல்லாரும் கொடுக்கத்தானே செய்றாங்க, உங்களுக்கு தெரியாதா?”

இவ்வாறு வெளிப்படையாக லஞ்சம் குறித்து அப்பெண் ஊழியர் பேசியதும், வாடிக்கையாளர் அதற்குச் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்ததும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், வாடிக்கையாளர் பணத்தைத் திருப்பித் கேட்கும்போது, “அந்த அம்மாவுக்கு (சார்பதிவாளர்) அன்னைக்கே மாலையே கொடுத்துவிட்டோம்…” என மற்றோரு தரப்புக்கு போனை மாற்றிவிடும் உரையாடலும் இடம்பெற்றுள்ளது.

தொடர் நடவடிக்கை:

அரசு அலுவலகங்களில் வெளிப்படையாக லஞ்சம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பரவிய இந்த ஆடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்த உயர் அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து திருவாடானை சார்பதிவாளர் மாலினியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். அரசுத்துறைகளில் முறைகேடுகளைத் தடுக்கத் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.