மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது

வேலூரில் பெண் ஜிம் பயிற்சியாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி ரூ.4.50 லட்சம் பணம், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பறித்ததாகக் கூறப்படும் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர் ஜிம் நடத்தி வருகிறார். அவரது உடற்பயிற்சி மையத்தில் ஏராளமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த எப்சியா (33) என்பவர் அந்த ஜிம்மில் உறுப்பினராக சேர்ந்தார். தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் அவர், ஜிம் உரிமையாளருடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது.

அப்போது, தனது கணவருக்கு நிலையான வருமானம் இல்லை என்றும், குடும்பம் பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும் கூறி, பலமுறை உதவி கேட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வீட்டிற்கு வருமாறு ஜிம் உரிமையாளரை எப்சியா அழைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற ஜிம் உரிமையாளருக்கு, எப்சியா மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் (38) ஆகியோர் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை அருந்திய சிறிது நேரத்தில் ஜிம் உரிமையாளர் மயக்கமடைந்த நிலையில், மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவத்தை எப்சியா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததுடன், ஆபாச புகைப்படங்களையும் எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, ஜிம் உரிமையாளரிடம் இருந்து ரூ.4.50 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பறித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில், மேலும் பணம் கொடுக்க முடியாது என ஜிம் உரிமையாளர் தெரிவித்தபோது, ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மீண்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக எப்சியா மற்றும் அவரது கணவர் மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.