அரசு பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு திரையிடக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவு!

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் நேரலையாகவோ அல்லது வகுப்பறை ஸ்மார்ட் போர்டுகள் வாயிலாகவோ காண்பிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்ற த.வெ.க.கட்சி சார்ந்த நிகழ்ச்சி, வகுப்பறையில் இருந்த ஸ்மார்ட் போர்டு மூலமாக மாணவர்களுக்கு நேரலை செய்து திரையிடப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்: பள்ளிக்கல்வித் துறையின் விதிமுறைகளையும் உத்தரவுகளையும் மீறி, கரூர் பள்ளி வகுப்பறையில் கட்சி நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலை செய்து காட்டியது முற்றிலும் தவறான செயலாகும். இந்த விதிமீறலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் அரசுப் பள்ளி வளாகங்களுக்குள் மாணவர்களுக்கு அரசியல் கட்சி நிகழ்ச்சிகளைக் காட்டக் கூடாது.

இயக்குநர்கள் கூட்டாக சுற்றறிக்கை: இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய மூன்று துறைகளின் இயக்குநர்களும் இணைந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், பள்ளி வளாகங்களில் சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.