பழைய வண்ணாரப்பேட்டை, அய்யா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (21). இவர் பீச் ரயில் நிலையம் அருகே செயல்படும் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பகுதி நேரமாக ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநராகவும் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் தனது பெண் தோழியை சந்தித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை சென்ட்ரல் அருகே ஈவெரா சாலையில் இருந்து வால்டாக்ஸ் சாலை நோக்கி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பைச் சேர்ந்த 2 பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தகுமாரின் கழுத்தில் குத்தினர்.
பலத்த காயமடைந்த வசந்தகுமார், ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய 2 பேரும் அங்கிருந்து தப்பினர். இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், பூக்கடை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை சென்ட்ரல் பகுதியில் நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புதிய திட்டம் தொடக்கம்!