திருச்சி மாவட்டம் சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும், மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி என்ற பெண்ணும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இன்று மணப்பாறைக்கு வந்த அவர்கள், ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அதை நோட்டமிட்டு வேவு பார்த்த சித்திரைவள்ளியின் தந்தை மலையாண்டி உள்ளிட்டோர் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஏரியாவில், கார்களில் தயாராக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, மகள் சித்திரைவள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் அஜித்குமார், தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கடுமையாக எதிர்த்துப் போராடினார். காரின் கண்ணாடிகளை உடைத்து மனைவியை மீட்க முயன்றபோதும், கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணை காரில் ஏற்றி அங்கிருந்து கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதில் அதிர்ச்சி அடைந்த அஜித்குமார், மனைவியை கடத்தி விட்டதாக நடுக்கத்துடன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனே காவல் உதவி ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு, கடத்திச் செல்லப்பட்ட காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் சித்திரைவள்ளியை பாதுகாப்பாக மீட்ட போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அஜித்குமார் அளித்த புகாரில் பெண்ணின் தந்தை மலையாண்டி மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணத்தை ஏற்க மறுத்ததால் இந்த கடத்தல் முயற்சி நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் முயற்சி மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
திருப்பூர்: அழகிகள் நிர்வாண ஆட்டம்: தவெக நிர்வாகி பாருக்கு சீல்…
கணவருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கூலிப்படையை வரவழைத்து கொலை …
திருப்பூர்: 18ல் திருமணம், 19ல் கர்ப்பிணி மனைவி கொலை…