முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர்களின் பட்டியலில் செந்தில் பாலாஜி, ஏ.வ.வேலு, சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு போன்ற முக்கியப் புள்ளிகள் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், கரூர் தேர்தல் பிரச்சார விவகாரங்களுக்குப் பதிலடியாக செந்தில் பாலாஜியின் முந்தைய முறைகேட்டுப் புகார்களைத் தவெக அரசு தோண்டி எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் அமலாக்கத்துறையும் (ED) இதில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏ.வ.வேலு இனி அரசியலை விட, வழக்குகளில் இருந்து தப்பிப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஏ.வ.வேலுவின் முடக்கத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை குறிவைத்துத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்த முழு வீச்சில் ஆயத்தமாகி இருந்தது. இதற்காகக் குறிப்பிட்ட ஒரு தேதியும் இரகசியமாகக் குறிக்கப்பட்டிருந்தது.
ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதி ரகசியத் திட்டம் எப்படியோ சேகர்பாபுவின் கவனத்திற்கு முன்கூட்டியே சென்றுள்ளது. தகவல் அறிந்த உடனே அவர் தனக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களை அவசர அவசரமாக வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வந்தால் தனது மொபைல் போனைப் பறிமுதல் செய்யக்கூடும் என்பதால், அதிலிருந்த முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களையும் அவர் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் முதலமைச்சர் அலுவலகம் (CMO) மூலமாக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அரசுத் துறையின் மிக ரகசியத் தகவல் சேகர்பாபுவுக்கு எப்படிக் கசிந்தது? லஞ்ச ஒழிப்புத்துறைக்குள்ளேயே இருக்கும் திமுக ஆதரவு ‘ஸ்லீப்பர் செல்’ (Sleeper Cell) யார்? என்பது குறித்து விசாரணையை முதல்வர் விஜய் தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளார்
திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதியில் சோதனை நடத்தினால், முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காமல் வெறும் கையோடு திரும்ப நேரிடலாம் என அரசுத் தரப்பு யோசித்துள்ளது. அவ்வாறு சோதனை தோல்வியில் முடிந்தால், சேகர்பாபு தன்னை ‘புனிதராகக்’ காட்டிக் கொள்வார் என்றும், தவெக அரசு பழிவாங்கல் அரசியலில் ஈடுபட்டுத் தோற்றுவிட்டது என திமுக தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அந்தத் தேதியில் நடைபெற இருந்த சோதனை தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
ஆவணங்கள் மாற்றப்பட்ட புதிய இடங்களைக் கண்டறியும் ரகசியப் பணிகள் தற்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளன. தகவல் கசியாமல், மிகத் துல்லியமாக அடுத்த கட்ட அதிரடிச் சோதனையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை அரங்கேற்றலாம் என்பதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது உச்சகட்டப் பரபரப்பு நிலவி வருகிறது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!