ஐதராபாத்தில் ஆண் நண்பர் பிறந்தநாளுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்த பெண்! 

ஐதராபாத் ஓட்டலில் 26 வயது பெண் ஒருவர் தனது நண்பருக்கு பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி வீடியோ காலில் இருந்தபோதே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத், போலாராம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா (26). இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி, ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. கணவரை பிரிந்து தனியாக வசித்துவரும் ரேணுகா, ஐதராபாத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபான விடுதியில் பணியாற்றிவந்துள்ளார்.

இவர் தனது ஆண் நண்பரான ஃபாரூக் என்பவருடன் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஒரு ஓட்டலுக்குச் சென்றார். அங்கு அறையை எடுத்த அவர்கள் முதலில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது ஆண் நண்பர் ஃபாரூக், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார்

இந்நிலையில், நள்ளிரவு 12.30 மணிக்கு பிறந்தநாள் காணும் தனது நண்பருக்கு ரேணுகா வீடியோ கால் செய்துள்ளார். அப்போது அவரிடம் ‘உன் பிறந்தநாளுக்கு நான் ஒரு பரிசு தருகிறேன்’ எனச் சொல்லியப்படியே திடீரென தூக்கிட்டுக்கொண்டுள்ளார். இதில், ரேணுகா மரணமடைந்தார்.

காவல்துறை விசாரணையில், கோல்கோண்டா பகுதியைச் சேர்ந்த ஃபாரூக்கிற்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது ஃபாரூக்கை விசாரணை வலையத்திற்குள் வைத்துள்ள காவல்துறை, இந்த தற்கொலை தொடர்பாக பலரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.