நண்பர் என பழகி ரூ.10 லட்சம் மற்றும் 26 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மிரட்டுவதாக, அயனாவரத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர், திருச்சி சிவா எம்பி-யின் மகள் மற்றும் மருமகன் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, அயனாவரம், சம்ருதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினா விலாசினி (46). இவரும், அவரது கணவர் நிர்மலும் அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அயனாவரம் காவல் உதவி ஆணையரிடம் வினா விலாசினி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அதே கட்சியில் இருந்த திருச்சி முத்துக்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
அந்த நட்பை பயன்படுத்தி, அவசரத் தேவைக்காக எனக் கூறி பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், கூகுள் பே உள்ளிட்ட இணையவழி பரிவர்த்தனைகள் மூலமாகவும் மொத்தம் ரூ.10 லட்சம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, 2023-ம் ஆண்டு அவரது மனைவி காயத்ரி சிவா மூலம் முதலில் 26 பவுன் தங்க நகைகளும், பின்னர், மேலும் 24 பவுன் தங்க நகைகளும் வாங்கிச் சென்றனர்.
பின்னர், பலமுறை கேட்டதையடுத்து 24 பவுன் நகைகளை மட்டும் திருப்பிக் கொடுத்தனர். ஆனால், மீதமுள்ள 26 பவுன் தங்க நகைகளையும், ரூ.10 லட்சத்தையும் திருப்பித் தர மறுப்பதுடன், கேட்டால் மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள முத்துக்குமார், தற்போதைய திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மூத்த மருமகன் என்றும், காயத்ரி சிவா அவரது மூத்த மகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் கடந்த 27-ம் தேதி பெறப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் போலீஸார் விசாரிக்கின்றனர். விசாரணை முடிவின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!