September 10, 2026

ரயில் நிலையம் முதல் ஷாப்பிங் மால் வரை… சென்னையில் நாளை போலியோ சொட்டு மருந்து

சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில், ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தெற்கு வட்டார துணை ஆணையாளர் அ. தாப் ரசூல், இ.ஆ.ப., மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்தியாவில் கடந்த 29 ஆண்டுகளாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் ஜூன் 28 அன்று நடைபெறுகிறது. சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட 5,56,877 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,641 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,435 நிரந்தர மையங்கள், 154 பேருந்து நிலையங்கள் மற்றும் பிற மையங்கள், 52 நடமாடும் மையங்கள் அடங்கும்.

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்திருந்தாலும், அண்டை நாடுகளில் நோய் பாதிப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கூடுதல் தவணை வழங்கப்படுகிறது. ஏற்கனவே வழக்கமான தடுப்பூசி பெற்றிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்த முகாமில் தவறாமல் சொட்டு மருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் முகாம் நடைபெறும். மேலும், மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நடமாடும் மையங்களும் செயல்படும். பிற மாநிலங்களில் இருந்து சென்னையில் வசிப்போர் மற்றும் அன்றைய தினம் சென்னை வழியாக பயணிக்கும் குழந்தைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 6,564 பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஜூன் 28 அன்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

You may have missed